Monday 14 September 2015

பாலைவனமாகும் காவிரி டெல்டா


மீத்தேன் ஆவணப்படத்தை பார்க்க இயலாத தோழர்கள் இதை படித்துவிட்டு  பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4000 ஆண்டுகள் பழமையானதும் , சுமார் 22,000 கிலோமீட்டருக்கான வாய்க்கால்களை கொண்டதும் 44,000 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை , திருவாரூர் , நாகப்பட்டினம் பகுதிகள் தான் ஆசியாவிலேயே மிகத் தொன்மையான உணவு சமவெளி ஆகும். இந்த பகுதி தான் தமிழகத்தில் உற்பத்தியை தன்னிறைவு அடைய செய்கிறது.

இத்தகைய பழமையானதும் தமிழகம் முழுமைக்கும் உணவை கொடுக்கும் பகுதியுமான காவிரி டெல்டாவை இயற்கை எரிவாயுவான மீத்தேன் எடுக்க போகிறோம் எனக்கூறி அழிக்க அனுமதி கொடுத்திருக்கிறது இந்திய அரசு.

காவிரி டெல்டாவில் பூமிக்கு அடியிலிருக்கும் நிலக்கரி படிமத்தில் படிந்திருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க தண்ணீர் , மணல் இவைகளுடன் 600 க்கும் அதிகமான இராசயன பொருட்கள் கலந்து 6000 அடிக்குக் கீழே துளையிட்டு அதில் இந்த கலவை அனுப்பி பாறையை வெடிக்க வைத்து மீத்தேன் எரிவாயுவை எடுப்பார்கள்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு கிணற்றில் ஒரு தடவை மீத்தேன் வாயு எடுக்க மட்டும் 5 கோடியே 66 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சுமார் 2000 கிணறுகள் தோண்டப்பட போவதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் 4 TMC தண்ணீர் எடுக்க போகிறார்கள் . 4 TMC தண்ணீரை கொண்டு 40 இலட்சம் பேருக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் வீதம் வருடம் முழுவதும் கொடுக்கலாம்.

அதே போல ஒரு முறை மீத்தேன் எடுக்க ஒரு கிணற்றுக்கு 400 லாரிகள் மணல் தேவை. மொத்தம் 2000 கிணறுகள் என்றால் 8 இலட்சம் லாரி மணல் ஒரு முறை எடுக்க தேவைப்படும். அதாவது 80,000 வீடுகள் கட்ட ஆகும் மணலை இது விழுங்கும்.

இது போல 40 அல்லது 50 ஆண்டுகள் தண்ணீரையும் மணலையும் தொடர்ந்து எடுத்தால் காவிரி டெல்டாவும் நம் வருங்கால தலைமுறையும் என்னவாகும். பிழைப்பு தேடி டெல்டா பகுதிகளில் வாழும் மக்கள் சுமார் ஒரு கோடி பேர் உள்நாட்டில் அகதிகளாக மாற வேண்டுமா ? சோற்றுக்கு பதிலாக நாம் என்ன அவர்கள் கொடுக்கும் எலும்புத்துண்டு பணத்தையா உண்ண முடியும் ?

மீத்தேன் எரிவாயு எடுப்பதன் மூலம் வெளியேறும் கதிரியக்கம் கலந்த வேதிப்பொருட்களை இவர்கள் நம் வயல்வெளிகளில் தான் கொட்டப் போகிறார்கள். ஆகையால் இந்நிலங்கள் விவசாயம் செய்ய முடியாதவையாக மாறுவதோடு அப்பகுதியில் வாழும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தாகவே இருக்கும். மொத்தத்தில் காவிரி டெல்டாவை முற்று முழுதாக அழிக்கத் தான் இத்திட்டம் பயன்படும்.

நம்மாழ்வார் சொல்லுவார் 'தமிழ்நாட்டுல மூணுல ஒருத்தரு குடிக்கிறது காவிரி ஆற்றுத் தண்ணீர் , வீராணம் ஏரியிலிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வருகிறது. வீராணத்துக்கு காவிரில இருந்து தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆகையால் காவிரிய காப்பத்தறது நம் அனைவரோட கடமை'


ஒட்டுமொத்த தமிழரும் மார்வாடி- பெருவணிக கும்பல்களின் இலாப வேட்டைக்காக பலியிடப்பட இருக்கும் , தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாக இருக்கும் தஞ்சை டெல்டாவினைக் காக்க களம் காணுவோம்.

No comments:

Post a Comment